பரமசிவன் அய்யன் கோவில்

அருள்மிகு பரமசிவன் கந்தாய குரு தன்னாசி அய்யன் கோவில்

அருள்மிகு பரமசிவன் கந்தாய குரு தன்னாசி அய்யன் கோவில்

இத்தலத்தில் திங்கள் வெள்ளிக்கிழமைகளிலும், பிரதோஷம், பவுர்ணமி, அமாவாசை மற்றும் கிருத்திகை போன்ற முக்கிய விரத தினங்களும் வெகுசிறப்பாக அனுஷ்டிக்கப்படுகின்றன. பெரு விழாக்களாக கார்த்திகை தீபம், ஆருத்ரா தரிசனம், மகாசிவராத்திரி ஆகியவை கொண்டாடப்படுகின்றன. இதில் வருடாந்திர வழிபாடாக தெலுங்கு வருடப் பிறப்பு அன்று வெள்ளியங்கிரியிலிருந்து தீர்த்தம் எடுத்துவரப்பட்டு விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடத்தப்படுகிறது

கருவறையை நோக்கி பஞ்ச வேல்களின் உருவில் பரமசிவன் அருள்பாலிக்கிறார். இவரிடம் வேண்டினால் நோய் தீரும். குடும்பத்தில் உள்ள பஞ்சம் விலகும் என்பது நம்பிக்கை.

உடல் தடிப்பு, விஷக்கடி, காணாக்கடி போன்ற பாதிப்பு உள்ளவர்கள் கோயிலில் தங்கியிருந்து குணமடைந்து செல்கிறார்கள். இக்கோயிலில் வழங்கப்படும் திருநீறு மிகவும் விசேஷம்

ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமதேவம், சத்யோஜாதம் என ஐந்து முகங்கள் கொண்டவரான சிவபெருமானுக்கும் ஐந்திற்கும் சிறப்பான தொடர்பு உண்டு. படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய ஐந்தொழிலுக்கு அதிபதி. சிவம், சக்தி, சாதாக்கியம், ஈஸ்வரம், சுத்த வித்யை என சிவ தத்துவம் ஐந்து. ஈசனுக்கு உரிய சிறப்பான மந்திரத்தில் இருப்பது ஐந்தெழுத்து. இது போல் சொல்லிக்கொண்டே போகலாம். சிவ வழிபாட்டில் அரூபவழிபாடு, உருவ வழிபாடு, அருஉருவவழிபாடு என மூவகை இருந்தாலும், சிவன்கோயில் என்றாலே நம் மனக்கண் முன் தோன்றுவது சிவலிங்கமேயாகும். ஆனால், சித்தர் ஒருவரால் பஞ்சாக்கரத்தின் சூட்சும ரூபமாக ஐந்து வேல்கள் நடப்பட்டு, அவற்றை ஒற்றைத் திருநாமமாக பரமசிவன் என்னும் திருப்பெயரினைச் சூட்டி வழிபடப்பட்ட எம்பெருமானை, இன்றும் சிவரூபமாகவே பக்தர்கள் போற்றி வணங்கிடும் தலம் ஒன்று கொங்கு நாட்டில் இருக்கிறது.